நம் குரல்

Saturday, January 2, 2016

மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள்: கனவுகளின் காலம்



அண்மையில் இரண்டு மலேசியத் தமிழ்ப்படங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இரண்டுமே நம்பிக்கை ஊட்டும் படைப்புகள். குறைந்த எதிர்பார்ப்புகளோடுதான் திரையரங்கம் போனேன். ஆனால், இரண்டுமே மிகுந்த மனநிறைவைத் தரும் வகையில் அமைந்து மகிழ்ச்சியைத் தந்தன. இரண்டு படங்களின் கதைகளும்  ஒரே மையப்புள்ளியில் இருந்து தொடங்குகின்றன. வன்முறைக்குள் சிக்கிக்கொண்டு வாழ்வைத் தொலைத்துவிட்டுத் தடுமாறும் நம் சமூகத்தின் பதிவாக இவை அமைந்துள்ளன. ஆயினும், இயக்குநர்கள் மாறுபட்ட அணுகுமுறையில் கதை நகர்த்திச் சென்று தத்தம் முத்திரையைப் பதித்துள்ளனர்.

மறவன்

அக்டோபர் மாதம் திரைக்கு வந்த படம் மறவன். அண்மையில் பிரிக்பீல்ட்ஸ் என்யூ செண்டரில் கிள்ளான் பண்டார் புத்ரி, சரவணன் கருணை இல்லத்தின் வளர்ச்சி நிதிக்காக மீண்டும் திரையேறியது. அரங்கம் நிறைந்த ரசிகர்கள் கூட்டம் ஆச்சரியமூட்டியது. படம் பார்த்து முடித்தபோது எல்லாக் கூறுகளிலும் மனநிறைவைத் தந்த படமாக மறவன் திரைப்படம் இருந்ததை உணர்ந்தேன்.  இயக்குநர் புவனேந்திரனின் திட்டமிட்ட கடும் உழைப்பில் சிறந்த படைப்பாக மறவன் உருவாகியுள்ளது.




மனைவி, இரண்டு பிள்ளைகளோடு பால்மரம் சீவி குறைந்த வருமானத்தில் சிரமத்தை எதிர்நோக்கும் ஒருவன் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத் தானே போய் வம்பில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து மீள முடியாமல் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கிறான். குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்புகளைத் திருடுதல், போதைப்பொருள் கடத்துதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலில் சிக்கிக்கொண்டு  குமரேசன் படும் அவஸ்தை மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது.  படத்தில் இன்னொரு கதையாக, சில இளைஞர்கள் குறுக்கு வழிக்குப் போகாமல்  அரசின் உதவியோடு விவசாயத்தில் ஈடுபட்டு முன்னேற முனைப்புக் காட்டுகின்றனர்.




உயிர்ப்பான வசனங்கள், இயல்பான நடிப்பு, சிறந்த ஒலி – ஒளிப்பதிவு, நகைச்சுவை, பிரச்சாரம் இல்லாமல் இயல்பான கதைப்போக்கு, அடுத்து என்ன..என்ன என்ற எதிர்பார்ப்பை  ரசிகர்களிடம்  ஏற்படுத்தும் பாங்கு என ஒவ்வொன்றையும் நுணுக்கமாகச் சிந்தித்து  இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.  குறிப்பாக, வில்லனாக  நடித்த ஹரிதாஸ் மிகச் சரியான தேர்வு. இவரின் குரலும், நடிப்பும் வசனமும் உச்சரிப்பும் நம்மை வியக்க வைக்கின்றன. சில இடங்களில் பயமுறுத்துகின்றன. வசனமே பேசாத துணைவில்லன் பார்வையால் மிரட்டுகிறார். படம் முழுக்க மோதிக்கொள்ளும் இருவரின் காதல் அழகிய கவிதை! ஒரு வெண்பொன் மாலை, வான் வெண்பனி பொழியும் வேளை, குளிருக்குக் குளிரை ஊட்டும் பெண்ணைக் கண்டேனே பாடல் எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்.



குமரேஷ், டேனிஸ், ஹரிதாஸ், லோகன், சீலன், ஷான், கவிதா தியாகராஜன், சங்கீதா கிருஷ்ணசாமி, புஸ்பா நாராயண் என நடிகர்களின் பங்களிப்பு மனநிறைவைத் தருகிறது. கையில் கிடைத்த கேமராவைத் தூக்கிக்கொண்டு நானும் படமெடுக்கிறேன் என்று படம் எடுத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. திரைப்படத்துறையின் நுணுக்கங்களை/ வித்தைகளைக் கற்றுக்கொண்டு நம்பிக்கைப் படைப்புகளைத் தரும் காலமிது. இதை நிரூபிக்கும் படம் மறவன்.



இயக்குநர் புவனேந்திரன் ஆறு ஆண்டுகள் தமிழகத்தில் பல படங்களில் பணிபுரிந்து திரைப்படக்கலையை உள்வாங்கிகொண்டு இப்பொழுது திரைப்பட முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நம்பிக்கை ஊட்டும் இயக்குநர்! இவரிடன் இன்னும் எதிர்பார்க்கலாம். இப்படத்தை இன்னும் பார்க்காதவர்கள் நமக்குப் பக்கத்தில் இருக்கும் சிலாங்கூரின் பண்டார் ரிஞ்சிங்,  புரோகா, செமினி போன்ற ஊர்களின் இயற்கை அழகை தரிசிக்கும் வாய்ப்பை இழக்கிறார்கள்.


ஜாகாட்


ஜாகாட் திரைப்படம் பார்க்க அண்மையில் என்யூ செண்டர் திரையரங்கு சென்றபோது என் இருக்கைக்கு இரு பக்கமும் சீனர்கள். முன்னும் பின்னும் சீனர்களின் முகங்கள். வேறு படத்திற்கு வந்துவிட்டோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆங்கில, சீன ஏடுகளில் விமர்சனம் படித்துவிட்டு அவர்கள் ஆர்வத்தோடு வந்திருந்தார்கள். மற்ற இனத்தாரையும் ஈர்த்ததில் ஜகாட் வெற்றிபெற்றுள்ளது.
இப்படம், இந்திய சமுதாயத்தின் கடந்துவந்த பாதையின் இருண்ட பகுதிகளை மீண்டும் பதிவு செய்து நம் கண் முன்னே காட்சிகளாக்கிக் காட்டுகிறது. 1990களில் தோட்டப்புறங்களை விட்டுப் புறம்போக்கு நிலங்களில் குடியேறி வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதர்களை நம் கண்முன்னே நடமாடவிட்டு அவர்களின் அவலங்களை உரக்கப் பேசுகிறது. வழக்கமாகச் தமிழ்ச் சினிமாவில் காணும் காதல், டூயட், நகைச்சுவை, கதாநாயகனைச் சுற்றிக் காட்டப்படும் பிம்பம் என அனைத்தையும் முற்றாகப் புறக்கணித்துவிட்டு இரத்தமும் சதையுமாக ஓர் இனத்தின் அவலத்தைப் பதிவு செய்யும் முயற்சி இப்படம். துணிந்து இம்முயற்சியில் ஈடுபட்டுக் கடும் உழைப்போடும் சமரசமில்லாமலும் இப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் சஞ்சய் மற்றும் அவர்தம் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.



படத்தில் பிரச்சாரம் இல்லை. சொல்ல வந்த கருத்துகளை திரைமொழியான காட்சியாக்கிக் காட்டுவதில் முனைப்புத் தெரிகிறது. படம் தொடங்கும்போதே ஒரு சிறுவனின் மனத்தில்  திரைப்படங்களில் காணும் வன்முறையும் சமயத்தில் காணும் வன்முறையும் பாதிப்புகளை ஏற்படுத்துவது காட்சியாக்கிக் காட்டப்படுகின்றன.  தொடர்ந்து பல காட்சிகளில், குறைந்த வசனங்களில் அழுத்தமான முகபாவங்களாலும் உடல்மொழியாலும் கதை நகர்த்தப்படுகிறது.

ஒரு குடும்பத்தை மையமாக்கி அந்தக் குடும்பத்தின்  வெவ்வேறு மனிதர்கள் வன்முறைக்கு இரையாகும் நிலை காட்டப்படுகிறது.  அப்போய் கதைப்பாத்திரத்தில் சிறுவனாக  நடித்துள்ள ஹர்விந்த்குமார் முகபாவனையால் நம்மை ஈர்க்கிறர். அவரின் அப்பாவாக வரும் மணியம் (குபேந்திரன்)வறுமையில் சிக்கிக்கொண்ட மனிதராக,  முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். வன்முறையில் ஈடுபட்டு இழப்பைச் சந்தித்து ஒதுங்கி வாழும் பாலா, குண்டர் கும்பலில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து மீளத் தவிக்கும் மெக்சிகோ என ஒவ்வொரு கதைப்பாத்திரமும்  நம் மனங்களில் அழுத்தமாகப் பதிகின்றது.



மலேசியச் சூழலை நம் கண்முன்னே காட்டும் பிற இன கதைப்பாத்திரங்களும் படத்தில் வலம் வருகின்றன. குண்டர் கும்பலுக்கு ஆள் சேர்க்கும் சீனர், லஞ்சம் வாங்கிக்கொண்டு குண்டல் கும்பலைக் கண்டு கொள்ளாத போலீஸ் அதிகாரி எனச் சமரசமின்றி உண்மைகளைப் போட்டு உடைக்கும் துணிவும் படத்தில் கவனிக்கத் தக்கது.

மாணவனின் இயல்பறிந்து அரவணைக்காமல் அவனை வகுப்பறையிலிருந்து நாடுகடத்தும் போக்குப்  படத்தில் சுட்டப்படுகிறது. அப்போய் சற்று மாறுபட்டுச் சிந்திக்கிறான். ஆனால், வகுப்பில் புறக்கணிக்கப்படுகிறான். இளம்தலைமுறையினர் வன்முறைக்குப்  போகாமல் தடுத்தாற்கொள்ளும் கல்வி வேண்டும் என்ற சிந்தனை பரிமாறப்படுகிறது.



சஞ்சய், யுவராஜன், சிவா பெரியண்ணன் ஆகியோரின் வசனங்கள் ஆர்ப்பட்டமில்லாத கதையின் போக்குக்குப் பொருந்தி வருகின்றன. சினிமாத்தனம் இல்லாமல் நம் கதையை உள்ளவாறு சமூகப் பொறுப்புணர்ச்சியோடு முன்வைத்த படம் ஜாகாட் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ரசனையின் பள்ளத்தில் கிடக்கும் நம் ரசிகர்களைக் கைத்தூக்கிவிட்டு, உண்மையான சினிமா பற்றிய புரிதல்களுக்குத் திசைகாட்டும் முயற்சி ஜாகாட். இன்னும் பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.


மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் நீண்ட கால கனவுகள் நிறைவேறிவரும் தருணம் இது.  மறவன், ஜாகாட் ஆகிய இரண்டு படங்களும் அந்தக் கனவுக்கான தொடக்கப் புள்ளியில் இருப்பதை திரைப்பட விமர்சகர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். நம் மண்ணில் உருவாகும் முயற்சிகளுக்கு நம் பங்களிப்பும் சேர வேண்டாமா?

No comments:

Post a Comment