நம் குரல்

Wednesday, October 22, 2014

தீபத்தின் ஒளிமழையில்..



பண்டிகை அல்லது சமய விழாக்களை நாம் காலங்காலமாகக் கொண்டாடி வருகிறோம். உழைப்பிலே முனைப்பு காட்டி இயந்திரத்தனமாகப் பயணப்படும் நம் வாழ்க்கையில் இவை உற்சாகத்தை விதைக்கின்றன; மகிழ்ச்சியைப் பயிர் செய்கின்றன; உணர்வுகளைப் புதுப்பிக்கின்றன. குறிப்பாக, குழந்தைகளும் இளையோரும் இந்த உற்சாக நதியில் ஆசைதீர நனைகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறைதான் என்றாலும் தீபாவளித் திருநாள் நம்மிடையே ஆனந்த நதியை ஆரவாரிக்கச் செய்கிறது.

நான் சிறுவனாய் இருந்தபோது வந்துபோன பல தீபாவளிகள் இன்னும் என் நினைவுக் கரைகளில் நீங்கா அலைகளாய் வந்து மோதுகின்றன. அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை உடுத்தி, என் வயது ஒத்த சிறுவர்கள் மத்தாப்பு கொளுத்தித் தோட்ட லயங்களில் மகிழ்ச்சி ஆட்டம்போட, நானோ படுக்கையைவிட்டு எழாமல் பொய்த் தூக்கத்தில் போர்வைக்குள் புதைந்து கிடப்பேன். என் அம்மாவும் அப்பாவும் “ஐயா. எந்திரியா.. பொழுது விடிஞ்சிருச்சு..” எனப் பலமுறை எழுப்பியும் ஏதோ ஆழ்ந்த உறக்கம்போல் அவர்களை ஏமாற்றுவேன். ஆனால், மனத்திற்குள்ளோ, ஐயோ, விடியும் பொழுதோடு தீபாவளிக் குதூகலமும் கரைகிறதே என்ற ஆதங்கமும் என்னுள் இழையோடும்.


அதற்கான காரணத்தை இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அன்றைய என் அறியாமை மீது வருத்தம்தான் வருகிறது. புதிய காலணியோ காற்சட்டையோ வாங்கித் தராததுதான் என் பொய்த்தூக்கத்திற்கான காரணம். தோட்டத்தில் வறுமையோடு வாழ்க்கை நடத்துகிற பெற்றோர்களின் நிலையை உணர்ந்துகொள்ளும் வயதில்லை அன்று. இழந்துபோன தீபாவளி நாட்களை நினைவிலேந்தித் தாலாட்டுகிறேன் இன்று.

ஒன்றைப் பற்றிய நினைவு மற்றொன்றையும் உடன் அழைத்து வருவதுபோல் தீபாவளி பற்றிய சிந்தனைகள் என்னைத் தழுகின்றன. தீபாவளி வந்தால் வீட்டுக்கு விருந்தினர் யாரும் வருவார்களா எனக் காத்திருந்து வரவேற்று உபசரித்தது ஒரு காலம். இன்றைய நிலையிலோ யாரும் விட்டுக்கு வந்துவிடக்கூடாது என்பதே சிலரின் பிரார்த்தனையாக உள்ளது. காரணம் என்ன தெரியுமா?

பூட்டிய கதவு
                             தொலைக்காட்சியில்
                              தீபாவளி நிகழ்ச்சிகள்

முட்டாள் பெட்டி (idiot box) என்று மேலைநாடுகளில் தொலைக்காட்சியை அழைப்பதின் காரணம் இப்பொழுது புரிகிறது. பிள்ளைகளின் பொன்னான நேரத்தையும் அது  திருடிக்கொள்கிறது. அவர்களின் வாசிப்புப் பழக்கத்திலும் வாய்க்கரிசி போட்டு விடுகிறது. தொலைக்காட்சி அறிவு வளர்ச்சிக்குப் பாலம் அமைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே வேளையில், பொழுதுபோக்கு எனும் போதையிலும் இளையோரைத் தள்ளிவிடுகிறது. வண்ணத்தில் மலர்ந்து இதயங்களைக் கொள்ளையடிக்கும் தீபாவளி இதழ்களைப் படித்துச் சுவைக்கத் தொலைக்காட்சி வழிவிடுமா?


கைபடாமல் தீபாவளி இதழ்கள்
                              பிள்ளைகள் முன்னே
                              தொலைக்காட்சி

தீபாவளி இதழ்கள் என்றவுடன் இன்னொன்றும் நினைவுக்கும் வருகிறது. தீபாவளி வரப்போகிறது என்பதை இவைதான் நமக்கு முன்னறிவிப்புச் செய்கின்றன. நம் இனத்துக்கு இழிவாகவும் அமைகிறது. 

தீபாவளி இதழ்கள்
வண்ணத்தில்
மது விளம்பரங்கள்

தீபாவளி வாழ்த்துகளைத் தனிமனிதரோ நிறுவனங்களோ கூறினால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இருளகற்றி ஒளியேற்றும் தீபங்களைச் சுற்றி மது பாட்டில்களை அடுக்கினால் அது அடுக்குமா? இனத்துக்குப் பெருமையாகுமா? தீபாவளி வாழ்த்து அட்டைகளிலும் அதே அவல நிலை. நமது பண்பாட்டைப் பாரம்பரியத்தை பறைசாற்றவேண்டிய வாழ்த்து அட்டைகளில் யார் யாரோ முகங்காட்டுவதும் ‘ஸ்டைல்’ காட்டுவதும் காணச் சகியாத காட்சிகள்.

வாழ்த்து அட்டைகள்
நம்மைப் பார்த்துச் சிரிக்கும்
நடிகர்கள்

நவீன தொழில் நுட்பத் தகவல் யுகத்தில் வாழ்த்து அட்டைகள் தம் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. அந்த இடங்களில் குறுஞ்செய்திகளின் ஆதிக்கம் கூடிவருகிறது.

குவிந்தன
வாழ்த்துகள்
குறுஞ்செய்திகளாய்..
நம்மைப் பீடித்த பிணிகளில் குடிப்பழக்கமும் ஒன்று. வளர்ந்தவர்களைப் பார்த்து வளரும் தலைமுறையும் இந்தப் பாழுங்கிணற்றில் விரும்பி விழுவது நம் மனத்தைப் பதைபதைக்க வைக்கிறது. அதிலும் தீபாவளி வந்தால் மொடாக் குடியர்களுக்குத் தண்ணியிலேயே கும்மாளம், கொண்டாட்டம்தான்.

நேற்று தீபாவளி
குப்பையில் குவியலாய்
காலி பாட்டில்கள்


தீபாவளி போன்ற பண்டிகை வந்தால் ஏழைகள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். உடையோ உணவோ பொருளோ கிடைக்கும் என்று. பொருள் படைத்தவர்களும் தலைவர்களும் காத்திருக்கிறார்கள். இல்லாதவர்களுக்கு உதவும் வாய்ப்பு வந்ததே என்று. இவர்களில் சிலருக்கு விளம்பரப் பசி அதிகம் என்பதால் அவர்களின் கண்கள் எப்பொழுதும் கேமரா மீதே கண்ணாக இருப்பதைக் காணலாம். 

ஏழைகளுக்கு அன்பளிப்பு 
தலைவர் தேடுகிறார்
கேமரா
‘இல்லை என்ற நிலையும் இல்லை. இல்லாதவர்கள் இங்கு இல்லை’ என்று வானொலியில் பாடல் ஒலித்தாலும் இல்லாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. புறம்போக்கு வீடுகளில் வறுமையில் உழல்கிற குடும்பங்களில் சிறுவர்களுக்கு மத்தாப்புக்கூட கைக்கெட்டாத கனவாகி விடுவதுண்டு.  

புறம்போக்கு வீடுகள்
சிறுவர்கள் தேடிச் சேகரிக்கும்
எரிந்த மத்தாப்பு

எத்தனையோ தீபாவளிகள் வந்து போகின்றன. ஆனால், பலருக்கும் பால்ய வயதில் கொண்டாடிய தீபாவளிகள்தாம் அவர்களின் மன ஊஞ்சலில் இன்னும் ஆடிக்கொண்டிருக்கின்றன. பண்டிகைகள் என்றால் அவை சிறுவர்களுக்கு உரியவை என்ற எண்ணமே மேலெழுகிறது. தீபாவளித் திருநாளில் எங்காவது தோட்ட மண்ணில் பயணப்பட்டால், அங்கே குதூகலத்தில் நிறைந்து பட்டாசும் மத்தாப்பும் கொளுத்தி மகிழும் சிறுவர்களில் என்னையே நான் காண்கிறேன். 

தோட்டத்தில் தீபாவளி
இன்னும் நினைவில்
பள்ளித் தோழர்கள்

செம்மண்சாலை
மத்தாப்பு கொளுத்தும் சிறுவர்களில்
என் முகம்

என் அப்பா  பற்றிய நினைவும் தீபாவளி வரும்போதெல்லாம் என்னை முற்றுகையிடும். வாழ்க்கை முழுதும் உழைத்துச் சுகமேதும் காணாமல்  போய்விட்ட அவரின் சிரித்த முகம் என்னை என்னவோ செய்யும். என் நினைவுத் தடாகத்தில் நித்திய மலராய் என்றும் பூத்திருக்கும் அந்த முகம்!

முறுக்கிய மீசை
சிரித்த முகமாய்
படையலில் அப்பா

No comments:

Post a Comment