நம் குரல்

Tuesday, October 28, 2014

ஒற்றனின் வருகை




இடைநின்று ஊடாடும் காற்றாக
சரித்திரப் பக்கங்களில் இடைச்செருகலாக
தலைநீட்டி வாழ்ந்து ஓய்ந்தவன் அவன்

மந்திராலோசனை அரங்கேறும் அரண்மனையின்
அந்தரங்க இடங்களில் நின்றிருக்கும் தூணாகிச்
செவிவழி புகும் ஏவல்களை ஏற்றுச் செயலாற்றியவன்

மக்கட்திரளில் நுழைந்து கலந்து
வெயிலில் அலைந்து திரிந்து
குவியும் தகவல்களில் உண்மைகளை மட்டும்
சல்லடைபோலும் சலித்துத் திரட்டி
இரகசியாய்ச் சுமந்து வந்தவன் அவன்

புராதனச் சாம்பலிலிருந்து எழுந்து
காலத் திரைச்சீலை விலக்கி
நவீனங்களால் நனையும்
குளிர்சாதன அறைக்குள் நுழைந்து
கடலையைக் கொறிக்கத் தொடங்குகிறான்

கண்முன்னே ஒளிரும் கணினித் திரையை
மக்கட்திரளெனக் கற்பனை செய்கிறான்
உண்மைகளையும் பொய்களையும் பிசைந்து
புதிய கலவையை உருவாக்கித் தன்னை வியக்கிறான்

அறைச்சுவரில் காது வைத்துக்கேட்டு
அதிலிருந்து கசியும் ஒலியை மொழிபெயர்க்கிறான்
தன் அனுமானங்களையும் ஆரூடங்களையும் கலந்து
புதிய தகவலைக் கண்டுபிடித்ததாய்ப் பூரிக்கிறான்

அறைக்குள் வந்துபோவோரின் பேச்சொலியிலிருந்து
தரவுகளைச் சேகரிக்கிறான்
சொல்லப்படுகிறது நம்பப்படுகிறது அறியப்படுகிறது
போன்ற சொற்களால் தன் முகம் மறைக்கிறான்

திரைமறைவிலிருந்து யார் யாரோ இடும்
யார் யாரோ கொண்டு வரும் கட்டளைகளை
மறுக்கவியலாது கைகுலுக்கி வரவேற்கிறான்

இவன் கண்ணிற்படுவானா எனப் பலரும்
காத்திருக்கிறர்கள் உங்களைப்போலவே
கோபங்கலந்த சொற்களைச் சேகரித்தவாறு




Wednesday, October 22, 2014

தீபத்தின் ஒளிமழையில்..



பண்டிகை அல்லது சமய விழாக்களை நாம் காலங்காலமாகக் கொண்டாடி வருகிறோம். உழைப்பிலே முனைப்பு காட்டி இயந்திரத்தனமாகப் பயணப்படும் நம் வாழ்க்கையில் இவை உற்சாகத்தை விதைக்கின்றன; மகிழ்ச்சியைப் பயிர் செய்கின்றன; உணர்வுகளைப் புதுப்பிக்கின்றன. குறிப்பாக, குழந்தைகளும் இளையோரும் இந்த உற்சாக நதியில் ஆசைதீர நனைகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறைதான் என்றாலும் தீபாவளித் திருநாள் நம்மிடையே ஆனந்த நதியை ஆரவாரிக்கச் செய்கிறது.

நான் சிறுவனாய் இருந்தபோது வந்துபோன பல தீபாவளிகள் இன்னும் என் நினைவுக் கரைகளில் நீங்கா அலைகளாய் வந்து மோதுகின்றன. அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை உடுத்தி, என் வயது ஒத்த சிறுவர்கள் மத்தாப்பு கொளுத்தித் தோட்ட லயங்களில் மகிழ்ச்சி ஆட்டம்போட, நானோ படுக்கையைவிட்டு எழாமல் பொய்த் தூக்கத்தில் போர்வைக்குள் புதைந்து கிடப்பேன். என் அம்மாவும் அப்பாவும் “ஐயா. எந்திரியா.. பொழுது விடிஞ்சிருச்சு..” எனப் பலமுறை எழுப்பியும் ஏதோ ஆழ்ந்த உறக்கம்போல் அவர்களை ஏமாற்றுவேன். ஆனால், மனத்திற்குள்ளோ, ஐயோ, விடியும் பொழுதோடு தீபாவளிக் குதூகலமும் கரைகிறதே என்ற ஆதங்கமும் என்னுள் இழையோடும்.


அதற்கான காரணத்தை இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அன்றைய என் அறியாமை மீது வருத்தம்தான் வருகிறது. புதிய காலணியோ காற்சட்டையோ வாங்கித் தராததுதான் என் பொய்த்தூக்கத்திற்கான காரணம். தோட்டத்தில் வறுமையோடு வாழ்க்கை நடத்துகிற பெற்றோர்களின் நிலையை உணர்ந்துகொள்ளும் வயதில்லை அன்று. இழந்துபோன தீபாவளி நாட்களை நினைவிலேந்தித் தாலாட்டுகிறேன் இன்று.

ஒன்றைப் பற்றிய நினைவு மற்றொன்றையும் உடன் அழைத்து வருவதுபோல் தீபாவளி பற்றிய சிந்தனைகள் என்னைத் தழுகின்றன. தீபாவளி வந்தால் வீட்டுக்கு விருந்தினர் யாரும் வருவார்களா எனக் காத்திருந்து வரவேற்று உபசரித்தது ஒரு காலம். இன்றைய நிலையிலோ யாரும் விட்டுக்கு வந்துவிடக்கூடாது என்பதே சிலரின் பிரார்த்தனையாக உள்ளது. காரணம் என்ன தெரியுமா?

பூட்டிய கதவு
                             தொலைக்காட்சியில்
                              தீபாவளி நிகழ்ச்சிகள்

முட்டாள் பெட்டி (idiot box) என்று மேலைநாடுகளில் தொலைக்காட்சியை அழைப்பதின் காரணம் இப்பொழுது புரிகிறது. பிள்ளைகளின் பொன்னான நேரத்தையும் அது  திருடிக்கொள்கிறது. அவர்களின் வாசிப்புப் பழக்கத்திலும் வாய்க்கரிசி போட்டு விடுகிறது. தொலைக்காட்சி அறிவு வளர்ச்சிக்குப் பாலம் அமைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே வேளையில், பொழுதுபோக்கு எனும் போதையிலும் இளையோரைத் தள்ளிவிடுகிறது. வண்ணத்தில் மலர்ந்து இதயங்களைக் கொள்ளையடிக்கும் தீபாவளி இதழ்களைப் படித்துச் சுவைக்கத் தொலைக்காட்சி வழிவிடுமா?


கைபடாமல் தீபாவளி இதழ்கள்
                              பிள்ளைகள் முன்னே
                              தொலைக்காட்சி

தீபாவளி இதழ்கள் என்றவுடன் இன்னொன்றும் நினைவுக்கும் வருகிறது. தீபாவளி வரப்போகிறது என்பதை இவைதான் நமக்கு முன்னறிவிப்புச் செய்கின்றன. நம் இனத்துக்கு இழிவாகவும் அமைகிறது. 

தீபாவளி இதழ்கள்
வண்ணத்தில்
மது விளம்பரங்கள்

தீபாவளி வாழ்த்துகளைத் தனிமனிதரோ நிறுவனங்களோ கூறினால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இருளகற்றி ஒளியேற்றும் தீபங்களைச் சுற்றி மது பாட்டில்களை அடுக்கினால் அது அடுக்குமா? இனத்துக்குப் பெருமையாகுமா? தீபாவளி வாழ்த்து அட்டைகளிலும் அதே அவல நிலை. நமது பண்பாட்டைப் பாரம்பரியத்தை பறைசாற்றவேண்டிய வாழ்த்து அட்டைகளில் யார் யாரோ முகங்காட்டுவதும் ‘ஸ்டைல்’ காட்டுவதும் காணச் சகியாத காட்சிகள்.

வாழ்த்து அட்டைகள்
நம்மைப் பார்த்துச் சிரிக்கும்
நடிகர்கள்

நவீன தொழில் நுட்பத் தகவல் யுகத்தில் வாழ்த்து அட்டைகள் தம் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. அந்த இடங்களில் குறுஞ்செய்திகளின் ஆதிக்கம் கூடிவருகிறது.

குவிந்தன
வாழ்த்துகள்
குறுஞ்செய்திகளாய்..
நம்மைப் பீடித்த பிணிகளில் குடிப்பழக்கமும் ஒன்று. வளர்ந்தவர்களைப் பார்த்து வளரும் தலைமுறையும் இந்தப் பாழுங்கிணற்றில் விரும்பி விழுவது நம் மனத்தைப் பதைபதைக்க வைக்கிறது. அதிலும் தீபாவளி வந்தால் மொடாக் குடியர்களுக்குத் தண்ணியிலேயே கும்மாளம், கொண்டாட்டம்தான்.

நேற்று தீபாவளி
குப்பையில் குவியலாய்
காலி பாட்டில்கள்


தீபாவளி போன்ற பண்டிகை வந்தால் ஏழைகள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். உடையோ உணவோ பொருளோ கிடைக்கும் என்று. பொருள் படைத்தவர்களும் தலைவர்களும் காத்திருக்கிறார்கள். இல்லாதவர்களுக்கு உதவும் வாய்ப்பு வந்ததே என்று. இவர்களில் சிலருக்கு விளம்பரப் பசி அதிகம் என்பதால் அவர்களின் கண்கள் எப்பொழுதும் கேமரா மீதே கண்ணாக இருப்பதைக் காணலாம். 

ஏழைகளுக்கு அன்பளிப்பு 
தலைவர் தேடுகிறார்
கேமரா
‘இல்லை என்ற நிலையும் இல்லை. இல்லாதவர்கள் இங்கு இல்லை’ என்று வானொலியில் பாடல் ஒலித்தாலும் இல்லாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. புறம்போக்கு வீடுகளில் வறுமையில் உழல்கிற குடும்பங்களில் சிறுவர்களுக்கு மத்தாப்புக்கூட கைக்கெட்டாத கனவாகி விடுவதுண்டு.  

புறம்போக்கு வீடுகள்
சிறுவர்கள் தேடிச் சேகரிக்கும்
எரிந்த மத்தாப்பு

எத்தனையோ தீபாவளிகள் வந்து போகின்றன. ஆனால், பலருக்கும் பால்ய வயதில் கொண்டாடிய தீபாவளிகள்தாம் அவர்களின் மன ஊஞ்சலில் இன்னும் ஆடிக்கொண்டிருக்கின்றன. பண்டிகைகள் என்றால் அவை சிறுவர்களுக்கு உரியவை என்ற எண்ணமே மேலெழுகிறது. தீபாவளித் திருநாளில் எங்காவது தோட்ட மண்ணில் பயணப்பட்டால், அங்கே குதூகலத்தில் நிறைந்து பட்டாசும் மத்தாப்பும் கொளுத்தி மகிழும் சிறுவர்களில் என்னையே நான் காண்கிறேன். 

தோட்டத்தில் தீபாவளி
இன்னும் நினைவில்
பள்ளித் தோழர்கள்

செம்மண்சாலை
மத்தாப்பு கொளுத்தும் சிறுவர்களில்
என் முகம்

என் அப்பா  பற்றிய நினைவும் தீபாவளி வரும்போதெல்லாம் என்னை முற்றுகையிடும். வாழ்க்கை முழுதும் உழைத்துச் சுகமேதும் காணாமல்  போய்விட்ட அவரின் சிரித்த முகம் என்னை என்னவோ செய்யும். என் நினைவுத் தடாகத்தில் நித்திய மலராய் என்றும் பூத்திருக்கும் அந்த முகம்!

முறுக்கிய மீசை
சிரித்த முகமாய்
படையலில் அப்பா

தீராத தாகம்





சபைகள் தலைகளால் நிறைகின்றன
சமயப் போதனைகள் நடக்கின்றன
இறைவனின் பேராற்றல் உணர்த்தப்படுகிறது
அவனின் திருநாமம் உச்சரிக்கப்படுகிறது
ஒலிபெருக்கிகள் பெருங்குரலில் இரைகின்றன
உணர்ச்சி தூண்டும் சொற்கள் கலக்கின்றன
விடைபெறும் மனங்களோடு ஒட்டிக்கொண்டு
கோரமுகம் மறைத்தவாறு பயணிக்கிறது
தீவிரவாதம்

இரகசிய இடங்களில் சந்திப்பு முடிவாகிறது
கைகுலுக்கல்கள் நிகழ்கின்றன
இறைவனின் திருநாமம் போற்றப்படுகிறது
ஆயுதப் பரிவர்த்தனை நடக்கிறது
திட்டங்கள் தீட்டப்படுகின்றன
உயிர்க்கொடை உன்னதமாகிறது
ஆள் மாறாட்டம் முடிவாகிறது
             
                               இன்னொரு பக்கம்
                                கருத்தாய்வுகள் அரங்கேறுகின்றன
                               சேதங்கள் முன்வைக்கப்படுகின்றன
                                இலாபங்கள் கணக்கிடப்படுகின்றன
                               அபாயங்கள் நினைவுறுத்தப்படுகின்றன
                                தீர்மானங்கள் முன்மொழியப்படுகின்றன
                                ஆயுதங்கள் பட்டியலிடப்படுகின்றன
                                அமைதி உடன்படிக்கை கையெழுத்தாகிறது
             
                                  எங்கோ
                                 இறைவனின் திருநாமம் உச்சரித்தவாறு
                                 குரல்வளை கடித்துக் குதறப்படுகிறது
 செங்குருதி பீச்சியடித்துப் பாய்கிறது
குற்றுயிராய்ப் பாலைவன மண்ணில்
தலைகுப்புறக் கவிழ்கிறது
மனிதாபிமானம்

இன்னும்
தாகம் தீராமல்
குருதியில் நனைந்த ஆயுதங்களைச்
சான்றுகளோடு துடைத்துவிட்டு
அடுத்த குரல்வளை தேடித் திரிகிறது
மதாபிமானம்

இடைவேளை இல்லாமல் எங்கும்
எல்லா இடங்களிலும் தொடர்ந்து
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இறைவனின் திருநாமம்
             


மரண இரயில் பாதை : சில குறிப்புகள்


     
•  நினைவுச் சாளரத்தின் வழியாக
 மங்கலான காட்சியாயினும்
 மறையாமல் நீண்டுகொண்டே இருக்கிறது
 எல்லாவற்றுக்கும் சாட்சியான அந்த இரயில் பாதை

• அதன் வழி நெடுக
கற்களுக்கும் கட்டைகளுக்கும் அடியில்
யார் காதுக்கும் எட்டாமல்
ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன
உயிர் பிழியும் கத்தல்கள் கதறல்கள்
   
•  அடர்ந்த காட்டின் இருளைத் துளைத்து
 மலைகளைக் குடைந்து நதிகளைக் கடந்து
 மலைச்சரிவுகளில் தவழ்ந்து
 தீரா வேட்கையோடு அது முன் நகர்ந்தது

•  தொலைதூரத்தில் ஒலித்த உறவுப் பறவைகளின்
 துயர இராகங்கள் நெருங்க முடியாமல்
 அடைய வேண்டிய தூரத்தைக் கணக்கிட்டவாறு
 பயணப்பட்டது

•  வழிநெடுக உதிர்த்த பிணங்களை
 தன் இரு பக்கங்களில் வீசியும்
 தன்  அடியில் புதைத்தும்
 தன் கொடூர முகத்தை மறைத்தவாறும்
 அதன் பயணம் தொடர்ந்தது

•  பேராசை மனங்களில் வழிந்த
 அடங்காத ஆவலுக்கு வளைந்து கொடுத்து
  தடைகளைத் தகர்த்தவாறு விரைந்தது

•  வரலாற்றுப் பக்கங்களில் வாழ்விழந்து
 தன் முகத்தை மட்டும் காட்டிவிட்டு
 இரகசியங்களைத் தன்னில் புதைத்தவாறு
 மௌனம் காக்கிறது

•  நாம் கடந்துபோகும்
 ஒவ்வொரு இரயில் பாதையும் நினைவூட்டுகிறது
 மனித உடல்களின் மீது மூர்க்கமாய்ப் பயணம்போன
 இரயில் பாதைகள்.
.

Thursday, October 2, 2014

கணக்கில் வராதவர்கள்





காற்றுக்கு அசையும் கொடிகள்
எழுந்து நிற்கும் தோரண வளைவுகள்
வெளிச்சம் உமிழும் விளக்குகள்
புதுச்சாயத்தில் பொலியும் கட்டடங்கள்
சீரமைக்கப்பட்ட சாலைகள்
வண்ண வண்ணப் பதாகைகளில்
புன்னகை சிந்தும் தலைவர்கள்
தோலின் நிறம்தான் வேறுபாடே அன்றி
ஒற்றுமையின் நிறம் ஒன்றென்று
கைகோர்க்கும் மனிதர்கள்
எழுச்சியூட்டும் முழக்கங்கள்
அணிவகுப்பில் கம்பீரம் காட்டும் முகங்கள்
வரிசைபிடித்துக் கையசைக்கும் சிறார்கள்
வியந்து ரசிக்கும் வெளிநாட்டினர்
இப்படியாக..
களைகட்டியிருந்தன கடைவீதிகள்
ஆரவாரத்தை அணிந்தவாறு
பூரிப்பைப் பகிர்ந்தவாறு

கொண்டாட்டம் முடிந்து எல்லாமும் எல்லாரும்
விடைபெற்றுப் போன பின்னர்
பழைய முகத்திற்குத் திரும்பும் கடைவீதிகள்
தமக்குப் பின்னால் மறைவாய்
எப்பொழுதும் பதுக்கி வைக்கின்றன
அணிவகுப்பில் பங்கேற்கத்
தகுதியில்லையெனச் சிலரை

தோல் நிறம் தெரியாதவாறு
உடலெங்கும் அழுக்கு நிறைய
கிழிந்த ஆடைகளை அணிந்தவாறு
மௌனம் கனத்த முகத்தோடு
போதையில் தன்னை மறந்தவாறு
உடைமையென ஏதும் இல்லாது
தவம்போலும் கையேந்தியவாறு
பின்வீதிகளில் உறைந்திருக்கிறார்கள் இவர்கள்

கூட்டிக் கழித்துப் பார்த்தால்
எல்லாம் சரியாக இருந்தாலும்
சரியில்லையென்றே மனம் சொல்கிறது
கணக்கில் விடுபட்டுப் போன இவர்கள்
கண்ணில் படும்போதெல்லாம்..