நம் குரல்

Wednesday, March 5, 2014

ஓவியம் ரசித்தல்





அந்தக் ஓவியக் கண்காட்சியில்
சுவர்களில் பெரிதும் சிறிதுமாக
வரிசையாகி நின்ற ஓவியங்களை
பலர் ரசிக்கத் தொடங்கினார்கள்

அவர்களில் நீங்களும்
எதிர்பார்ப்போடு ஓவியங்களை
உற்றுப்பார்த்து ரசிக்க முயன்றீர்கள்

வர்ணக் கலவையில் பேசும்
அவற்றின் மௌனமொழிக்குக் காதுகொடுத்து
காட்சிகளின் அடர்த்தியைக் கண்களில் நிறைத்து
கோடுகளின் மீதூர்ந்து
இருண்மையின் அர்த்தம் தேடி
வேறு கோணங்களில் கண்கள் பதித்து
காட்சிகளுக்குப் பின்னால் பயணித்து
முகந்தெரியா ஓவியனின் மனம் துழாவி
உள்ளே நுழைய முயன்றனர் பலர்

சிலரால் எளிதில் உள் நுழைந்து
காட்சியோடு கலக்க முடிந்தது
சில ஓவியங்கள் சிலரை வன்மையாய்
தடுத்து நிறுத்தி வேடிக்கை காட்டின

நவீன கவிதைபோல்
நவீன ஓவியம் ரசித்தலும்
ஒரு கலை என்றுணர்ந்தவர்கள்
தொடர்ந்து உள்ளே நுழைய முயல்கிறார்கள்
மற்றவர்கள் பார்வைக்கு
வர்ணங்களின் கொண்டாட்டம் அன்றி
ஓவியங்கள் ஓவியங்களாகத் தெரிவதில்லை

திறக்கப்படாத பெட்டிகள்




ஆணிகள் அடிக்கப்பட்டு
இறுக்கமாக மூடப்பட்டு
மூலையில் கிடக்கின்றன என் பெட்டிகள்
எத்தனை நாள்கள் இப்படி
நினைவில் இல்லை

பெட்டியின்மேல் புழுதி போர்வையாய்க் கிடக்கிறது
பெட்டிகளுக்கும் சுவருக்கும்
இடைப்பட்ட சந்தில்
எலி குடும்பம் நடத்தும் வாய்ப்பு
நேர்ந்தது என்னால்

வீட்டுக்குள் நுழையும்போதும்
அங்குமிங்கும் நடமாடும்போதும்
கண்ணில்படுகின்றன பெட்டிகள்

பெட்டிகள் குறித்து
ஏதாவது முடிவெடுக்கவேண்டும்
இந்த உறுதியான எண்ணம்
நிறைவேறுவதாய்த் தெரியவில்லை

பெட்டிகளின் இருப்புப் பற்றி
அவ்வப்போது என் கவனத்தில் அறைகின்றன
அம்மா அப்பாவின் சொற்கள்

நாளை பார்க்கலாம் என
சோம்பல் மனது தட்டிக் கழிக்கிறது

பெட்டிகள் இருப்பது
எனக்கு உள்ளேயா வெளியிலா
சில நேரம் குழம்புகிறேன்

உங்களைப் போலவே
நானும் ஆர்வமாய் இருக்கிறேன்
உள்ளே என்ன இருக்கும் என்பதைத்
தெரிந்து கொள்வதில்..