நம் குரல்

Friday, May 27, 2011

எனது முதல் கவிதை



1978ஆம் ஆண்டில் நான் ஐந்தாம் படிவத்தில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் கவிதா தேவியோடு எனக்குக் காதல் அரும்பத் தொடங்கியது. அப்பொழுது வெளிவந்த வானம்பாடி வார இதழ் எனக்குள் துயில்கொண்டிருந்த கவிதை உணர்வுகளை எழுப்பிவிட்டது.

வானம்பாடி இதழின் பக்க அமைப்பும் படைப்புகளின் நேர்த்தியும் குறிப்பாக புதுக்கவிதைகளின் அணிவகுப்பும் என்னை அதன் தீவிர வாசகனாக்கிவிட்டது. ஒரு தீபாவளி பரபரப்பு நேரத்தில், இரவாங் ஸ்ரீகாரிங் இடைநிலைப்பள்ளியில் தேர்வு முடிந்து, அப்பாராவ் புத்தகக் கடையில் வானம்பாடி முதல் இதழை வாங்கிப் படித்துக்கொண்டே பேருந்தில் பயணப்பட்டது இன்னும் நினைவில் அழியாத காட்சியாய் அப்பிக் கிடக்கின்றது.

ஆதி.குமணன், இராஜகுமாரன், அக்கினி மற்றும் பல புதியவர்களின் கனமான படைப்புகள் வானம்பாடிக்கு மகுடங்களாகத் திகழ்ந்தன. என்னை அதிகம் ஈர்த்துகொண்டவை புதுக்கவிதைகள். சின்னச் சின்னச் சொற்சிலம்பங்களில், சொல் ஊர்வலங்களில் வாழ்க்கையின் மர்மங்களைத் திடீரென திரைவிலக்கிக் காட்டும் கனமான, ஆழமான புதுக்கவிதைகளைப் படிக்கப் படிக்க எழுதவேண்டும் எனும் வேட்கை எனக்குள் எட்டிப் பார்த்தது.

இரவாங்கை அடுத்துள்ள சுங்கை சோ தோட்டத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். என்னை ஒரு படைப்பாளனாக உருவாக்கியதில் பசுமை கொழித்துக் கிடந்த அந்தத் தோட்டத்திற்கும் கணிசமான பங்குண்டு. இயற்கை அழகு நிறைந்து வழிந்த என் பிறந்த மண்ணே எனக்குள் பசித்த புலன்களுக்கு விருந்து பரிமாறிக்கொண்டிருந்தது.

தோட்ட நுழைவாயிலில் அமைந்திருந்த இடுகாடு, இடுப்பொடிந்த செம்மண் சாலைகள், தீம்பாரில் வரிசை பிடித்து நேர்த்தியாய் நிற்கும் கித்தா மரங்கள், மஞ்சள் வெயில் பூசிய மாலைப்பொழுதுகள், தோட்டத்து முச்சந்தியில் கதைத்துத் திரியும் பெரிசுகள், பனிகொட்டும் திறந்த வெளியில் பார்த்த சினிமாப் படங்கள், பக்கத்து வீட்டுச் சின்னக்காளை கங்காணியின் ஒலிநாடாவில் கசிந்த பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களின் வசனங்கள், ஆடுகள் மேய்க்கும் பொழுதுகளில் எனக்குக் கிடைத்த தனிமை - இவை எல்லாமே என் உணர்வுகளில் கலந்து என்னைப் படைப்புலகத்திற்கு ஆற்றுப்படுத்தின.

அதோடு, இளைஞர்கள் முயற்சியால் தோட்டத்தில் அமைக்கப்பட்ட ‘கலைமகள் படிப்பகம்’ என் படிக்கும் ஆர்வத்திற்கு நீர் வார்த்துக்கொண்டிருந்தது. பழைய மாணவர் சங்கம் என்ற இயக்கத்தைத் தொடங்கி திருமணி, எல்லப்பன், பச்சையப்பன், பிச்சைமுத்து, ஆகியோரின் வழிகாட்டலில் தோட்டத்து இளைஞர்கள் கட்டுக்கோப்பாகச் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

முதலில், ஒரு பார்வையாளனாக இருந்து அவர்களின் பணிகளை வேடிக்கைப் பார்த்தேன். பின்னர், கலைமகள் படிப்பகச் செயலாளராகப் பொறுப்பேற்று அதன் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற வழிகளில் - ஒல்லும் வகையெலாம் செயலாற்றினேன்.

படிக்கும் பழக்கத்தோடு, சமுதாய உணர்வும் இதனால் என்னுள் நீக்கமற நிறைந்துபோனது. கலைமகள் படிப்பக ஆண்டறிக்கை, செயலறிக்கை இவற்றை முழுமையாக நானே தயாரித்தேன். என் எழுத்துப் பயிற்சிக்கு இவை நல்ல களமாயின.

முதலில் தமிழ் நேசன், தமிழ் மலர் ஞாயிறு மலர்களுக்கு ‘வாசகர் கடிதம்’ பகுதிக்கு எழுதத் தொடங்கினேன். நான் வசித்த தோட்ட லயத்தில் கடைசி வீட்டில் வசித்த நண்பன் செல்லையா என் எழுத்துலக ஆர்வத்திற்குத் துணையாக வந்தான். ஞாயிற்றுக்கிழமை நாளிதழ்களோடு அவன் வீட்டிற்குப் போய் விடுவேன். இருவரும் நாளிதழ்களைப் புரட்டுவோம். கதை, கட்டுரைகளை அலசுவோம். நான்கு வரிகளில் எதையாவது அவசரமாக எழுதி மறுநாள் அவசரமாகத் தபாலில் சேர்ப்போம். நாளிதழில் பெயர் வருவதைக் காண்பது ஒரு போதை வஸ்துபோல் இருவரையும் இழுக்கத் தொடங்கியது. இப்படியாக, நாளிதழ்களுக்கு எழுதும் ஆர்வம் வளரத்தொடங்கி பின்னர் சிறு சிறு கட்டுரைகளாக கிளைவிட்டது.

என் அண்ணன் ந. பச்சையப்பன் சிறுகதை எழுத்தாளராக இருந்ததும் என் எழுத்துலக ஈடுபாட்டுக்கு வழிகோலியது. அவரின் சிறுகதை, கட்டுரைகள் நாளிதழ்களில் வரும்போது ஒருமுறைக்குப் பலமுறை அவற்றைப் படித்து ரசிப்பேன். இதனால், எழுதவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் தீவிரமாகியது.

ஒரு நாள் அண்ணன் என்னை அழைத்தார். “வாசகர் கடிதம் மட்டும் எழுதினா எப்படி? வானம்பாடி படிக்கிறல்ல, கவிதையும் எழுதிப்பாரு” என்றார்.

அதுவரை, வானம்பாடிக் கவிதைகளைப் படித்து ரசிக்கும் வாசகனாக இருந்த நான், அண்ணன் சொன்னதற்காக எதையாவது எழுதியே தீருவது என்ற முடிவுக்கு வந்தேன்.

என்ன எழுதுவது? வாழ்க்கை அனுபவங்கள் அதிகம் வாய்க்காத காலக்கட்டம் அது. தமிழ் மொழியின் வசீகரங்களின் மடியில் கிடந்த எனக்குக் கருத்துலகம் கைக்கெட்டாத தூரத்தில் இருந்தது. தீவிரமாகச் சிந்தித்தேன். அடர்ந்த இரப்பர்க் காடுகளில் மங்கு துடைத்த என் அனுபவத்தையே பாடுபொருளாக்கினேன். வானம்பாடியில் அச்சு வாகனம் ஏறிவந்த அந்தப்படைப்பு இதோ:
மங்குகள்
அவள்
இளம் பட்டையை
மெல்லச் சீவ
கோட்டில் அரும்பி
பீலியில் வழிந்த
பருவக் கண்ணீரை
ஏற்றுக்கொண்டதால்
எங்களை நாங்களே
கறைபடுத்திக்கொண்ட
தியாகச் செம்மல்கள்
அவளின்
ஆறு கெலன்
வாளி நிரம்ப
நாங்கள்
நான்கு மணிநேரம்
தாய்மை பெற்றோம்

நான் எழுதிய படைப்பு சிறு மாற்றத்தோடு (இராஜகுமாரன் அல்லது அக்கினி கைபட்டு) இப்படி வெளிவந்தது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.

இன்று, நான் பிறந்து வளர்ந்த சுங்கை சோ தோட்டம் தன் பெயரை இழந்துவிட்டு ஒரு தாமான் பெயரைத் தாங்கி நிற்கிறது. கலைமகள் படிப்பகம் இடம்பெயர்ந்து பொலிவிழந்து கிடக்கிறது. தோட்டத்தின் இயற்கை அழகை மேம்பாட்டுத் திட்டங்கள் தின்றுச் செரித்துவிட்டன.

அண்ணன் உயிரோடு இருந்தவரை என் இயற்பெயரான ந. பாலகிருஷ்ணன் என்ற பெயரிலேயே எழுதி வந்தேன். அண்ணனின் மறைவுக்குப்பின் (1980) அவரின் பெயரின் முதல் பகுதியை என் பெயரின் முதல் பகுதியோடு (பச்சை + பாலன்) இணைத்தேன். இப்படித்தான் பாலகிருஷ்ணன் பச்சைபாலனாக மாறிப்போனேன். எழுத்துலகில் நிறைய சாதிக்க நினைத்தவரின் ஆசைகளை உணர்வுபூர்வமாக என் இதயம் ஏந்திக்கொண்டது.

என்னை எழுதச் சொல்லி உற்சாகமூட்டிய என் அண்ணன் இன்று உயிரோடு இல்லை. ஆனால், என் முதல் கவிதையும் என்னைப் படைப்பாளனாக உருவாக்கிய அந்தப் பழைய நினைவுகளும் இன்னும் பத்திரமாக, காலக்கரையான் அரித்துவிட முடியாத ஆழத்தில் அப்படியே இருக்கின்றன.

முதல் காதலோ முதல் முத்தமோ மறக்க முடியாதவை என்பார்கள். எனக்கு அது முதல் கவிதையாக இருக்கிறது.

www.thangameen.com

No comments:

Post a Comment