நம் குரல்

Friday, February 4, 2011

பாழ்நிலத்தின் பகற்பொழுது


“உங்களுக்குப் புரியுமா?
புரியுமென நீங்கள் தலையசைப்பது
பாவனையன்றி வேறென்ன?

வாழ்ந்த வீடு
கூடி இருந்த உறவுகள்
நெருங்கி வந்த சொந்தங்கள்
நீரூற்றி வளர்த்த பயிர்கள்
அன்போடு அண்டிய பிராணிகள்
பள்ளிக்கூடம், கோயில் எல்லாம்
உடைபட்டு அறுபட்டு குருதி உறிஞ்சப்பட்டு
நசுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு சிதிலமாக்கப்பட்டு
மண்ணோடு கரைந்தழிந்த

ஒரு பகற்பொழுதின் குரூர வெட்கை
பாழ்நிலத்தில் படர்ந்து அசூரப் பசியோடு
வாய்பிளந்து உடலில் ஊர்ந்து....

‘இச்’கொட்டும் உங்களுக்கு
இவையெல்லாம் புரியுமா?”

புகைப்படக் கண்காட்சியில்
அதன் பொறுப்பாளர் கேட்ட கேள்வி தவிர்த்து
ஆசையோடு அடுத்த படத்திற்கு நகர்கிறேன்.

2 comments:

  1. நண்பர் பச்சைபாலன் அவர்களுக்கு,

    வணக்கம்.
    அதிக நாளாகிவிட்டது உங்களைச் சந்தித்து.

    எப்போதாவது வரும் வானவில் போல் மனதையள்ளும் கவிதை.
    வரிகள் முகத்தை அறைகின்றன.
    மனதைப் பிசைகின்றன.

    வேறேன்ன செய்யமுடியும் நம்மால்.

    அன்புடன்,
    பூச்சோங் எம்.சேகர்
    (நான் நினைவுக்கு வருகிறேனா?)

    ReplyDelete
  2. வணக்கம் சேகர்.

    தங்களை மறக்க முடியுமா?

    கல்லூரியில் பயின்ற காலத்திலேயே தமிழ் நேசன்
    புதன் மலரில் தொடர்கதை எழுதி
    என்னை வியக்க வைத்தவர் நீங்கள்!

    இலக்கியம் நம்மை இணைய வாகனத்தில்
    சந்திக்கும் வாய்ப்பினைத் தந்துள்ளது.

    கவிதை குறித்த உங்கள் கருத்துக்கு நன்றி!

    உங்களின் அன்பு மொழி
    எனக்கு உற்சாக மொழி, நன்றி

    ReplyDelete