நம் குரல்

Sunday, September 12, 2010

எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு -1






இதுவரை சொல்லாதது..

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் எத்தனையோ சிறுகதைப் பட்டறைகள், திறனாய்வுக் கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. ஆனால், அவற்றில் இதுவரை சொல்லப்படாத சிந்தனைகளை ஜெயமோகன் எழுத்தாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.நிகழ்ச்சி: சிறுகதைப் பட்டறை. நாள்: 12.9.10. இடம்: எழுத்தாளர் சங்கத்தின் ஆதி.குமணன் அரங்கம். வருகை: 30 எழுத்தாளர்கள்.ஞாயிறு காலை நிகழ்ச்சி என்றாலும் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். செயலாளர் குணநாதன் வரவேற்க, எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் பட்டறையின் நோக்கத்தை விளக்க, நிகழ்ச்சி தொடங்கியது. மூன்று நாட்கள் வடக்கில் பயணம் செய்துவிட்டு இடையறாத நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் எனக் களைப்பாக இருந்தாலும் ஜெயமோகன் ஒலிபெருக்கியின் முன்வந்து நின்றபோது இலக்கிய உற்சாகத்தோடு பேசத்தொடங்கினார். கையில் எந்தக் குறிப்பும் இல்லை. அவரின் இலக்கிய ஆளுமைக்குப் பின்னணியில் அசுர வாசிப்பும் தீவிர இலக்கியத் தேடலும் அசாத்திய ஞாபகச் சக்தியும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. குறைவாகப் படித்து நிறைவாகப் பேச விழையும் நம்மில் பலருக்கு ஜெயமோகன் ஒரு பாடப் புத்தகம். அவசியம் வாசிக்க வேண்டும்.

சிறுகதை என்றால் என்ன? சிறுகதையின் விதிகள், சிறுகதையின் வடிவம் என மூன்று பகுதிகளாக தம் உரையை நேர்த்தியாகப் பிரித்துக்கொண்டு பேசினார். மரபான சிறுகதை வடிவத்தைப் புரிந்துகொள்ள பல சிறுகதைகளை மேற்கோள்களாகக் காட்டினார்.

சிறுகதை என்றால் என்ன?

1. சிறுகதை என்றால் சிறிய கதை அன்று. கதை வேறு, சிறுகதை வேறு. பாட்டி வடை சுட்ட கதை, கதைதான். சிறுகதை அன்று

2. சிறுகதையின் முடிவில் ஒரு திருப்பம் (twist) இருக்கவேண்டும். திருப்பம் முடிவான பின்னரே சிறுகதை எழுதத் தொடங்குங்கள்.

3. கூறவந்த முக்கியக் கருத்தை ஒளித்துவைக்க வேண்டும். முடிந்தால் வாசகனின் அனுமானத்திற்கு விட்டுவிட வேண்டும். கன்னிவெடிகளை மறைத்துவைப்பதுபோல. ஒரு சிறுகதை முடியும்போது பல கதைகள் தொடங்குகின்றன.


சிறுகதையின் விதிகள்

1. சிறுகதையில் சொல்லாதீர்கள், காட்டுங்கள். (Show it, don’t tell)

2. நுணுக்கமான தகவல்களைத் தாருங்கள் (give details). பொதுவாக எதையும் சொல்லிச் சென்றால் வாசகன் மனத்தில் கதைப்பாத்திரம், சூழல் பற்றிய அழுத்தமான பதிவுகள் இடம்பெறா.

3. எல்லாவற்றையும் சொல்லாதீர்கள் (don’t tell everything). தேவையான தேர்ந்தெடுத்த முக்கியத் தகவல்கள் போதும்.

சிறுகதையின் வடிவம்

1. சிறுகதையின் தொடக்கம், வளர்ப்பு, முடிவு (எடுப்பு, தொடுப்பு, முடிப்பு) என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். முதல் பத்தியிலேயே சிறுகதை தொடங்கவேண்டும். பிறகு, தேவையான நடுப்பகுதி. திருப்பம் நிகழ்ந்தவுடன் கதையைத் தேவையில்லாமல் நீட்டிக்காமல் உடனே முடிக்கவேண்டும்.

2. சிறுகதைக்குப் பொருத்தமான நோக்குநிலை (point of view). யார் பார்வையில் கதை சொல்லப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.

3. உங்கள் எழுத்துப் பிரதியைத் திருத்துங்கள். தேவையில்லாத சொல், சொற்றொடர், வாக்கியங்களை நீக்குங்கள். (கூறியது கூறல் கூடாது)

4. அர்த்தப்பூர்வமான, செறிவுபடுத்தப்பட்ட உரையாடலைப் பயன்படுத்துங்கள்.

மூன்று மணி நேரம் கடந்துபோனதே தெரியவில்லை. ஒவ்வொரு கருத்துக்கும் மேற்கோளாகக் காட்டிய பொருத்தமான சிறுகதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. கேள்வி நேரத்தின்போது, நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றிய விளக்கம் அனைவருக்கும் பயனாக அமைந்தது. எல்லார் முகங்களிலும் பூரண நிறைவு இழையோடியதைக் காண முடிந்தது.

நன்றி உரையாற்றிய ஆதி.இராஜகுமாரன் குறிப்பிட்டதுபோல, ஜெயமோகனின் அறிவின் ஆழமும், அவருள்ளே நிறைந்து கிடக்கும் தகவல் களஞ்சியமும் என்னை வியப்பைத் தந்துகொண்டே இருக்கின்றன. ஜெயமோகனின் மலேசியப் பயணத்திற்குக் காரணமான கூலிம் தியான ஆசிரம சுவாமி பிரமானந்தா சரஸ்வதிக்கு மனம் நன்றி மடலை வாசித்தது. மாலை வல்லினம் கலை இலக்கிய விழாவில் ஜெயமோகனின் உரையை மீண்டும் கேட்கப்போகும் தருணத்திற்கு மனம் காத்திருந்தது.



No comments:

Post a Comment