நம் குரல்

Thursday, February 18, 2010

பயணக் குறிப்புகள்


எதிரெதிர் திசையில் பயணமாகி
வழியில் சந்தித்துக்கொள்கிறோம்
முன்பின் அறிமுகமில்லை எனினும்
சிறு புன்னகையில் நெருங்குகிறோம்
கைகுலுக்கலில் தொடங்கி அறிமுகமாகி
நலம் விசாரிக்கிறோம்

நம் கைகளில் இருக்கும் நாளிதழ்கள்
இருவரிடையே உரையாடலைத் தொடக்க
நிகழ்கால நடப்பை அலசி
நம் நிலைப்பாட்டை முன்வைக்கிறோம்
தோளில் சுமந்துவந்த துயரங்களை,
கைகளின் காயங்களைப்
பகிர்ந்துகொள்கிறோம்

அதுவரை சேகரித்து வைத்துள்ள
இருப்புகளைப் பற்றிப் பெருமைபேசுகிறோம்
நின்றுகொண்டே தொலைதூரத்துக்கும்
பயணம் போய் வருகிறோம்
எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அவநம்பிக்கை
இருவரிடமும் சமஅளவாய் இருப்பதை
வியந்து இரசிக்கிறோம்

கைக்குலுக்கி விடைபெற்று நடந்து
மீண்டும் முகம் திருப்புகிறோம்

முகத்திலிருந்து கழற்றப்பட்ட ஏதும்
தென்படுகிறதாயென
மற்றவர் கைகளில் தேடுகிறோம்

No comments:

Post a Comment