நம் குரல்

Monday, June 26, 2017

சீ.முத்துசாமியின் 'இருளுள் அலையும் குரல்கள்'


குரலற்றவர்களின் குரல்


   

உயிர் உருக்கும் அந்தக் குரல்
காற்றுவெளியில்
கவனம் ஈர்க்க
எங்கும் நீக்கமற நிறைகிறது

இடைவிடாது ஒலித்தும்
யார் காதுக்கும் கேட்பதில்லை
அவர்களின் குரல்

தோல் தடித்த காதுகள்
சில ஒலிகளை  மட்டும்
எப்பொழுதும் உள்வாங்குவதில்லை

அவர்கள்
பாலைவனத்தில் சுடுமணல்
கடந்து பயணிக்கிறார்கள்
அகதிமுகாம்களில் நீண்ட வரிசையில்
நிற்கிறார்கள்
வாழுமிடங்களை  நெருங்கிவரும்                      
இயந்திரங்களைப் பார்க்கிறார்கள்
சாலையோரங்களில் கடந்துபோகும்
மனிதர்களிடம் கையேந்துகிறார்கள்
போரில் சிதலமான வீடுகள் முன்
செய்வதறியாது கலங்குகிறார்கள்

அவர்கள்
குறைந்த வருமானத்தில்
வாழ்வதறியாது தவிக்கிறார்கள்                                
தீவிரவாதத் தாக்குதலில்
சிதைந்த உடல் உறுப்புகளோடு                                
நடமாடுகிறார்கள்
பேச்சுரிமைகள் மறுக்கப்படுவதால்                          
தமக்குள்ளாக முணகுகிறார்கள்      

அவர்கள்                   
மதத்தின் கைகள் தங்கள் கழுத்தை
இறுக்குவதைப் பொறுக்காமல்
புலம்புகிறார்கள்                                                                    
அதிகார பீடங்கள் தங்களைக்
கீழே தள்ளி எழுப்பப்படுவதால்
துடிக்கிறார்கள்                                                                                 

நம் முகங்களின் சாயல்களில்
அவர்கள் முகங்கள் இருந்தும்
நாம் அவர்களை எளிதாய்க்
கடந்து போகிறோம்

காதில் விழும் ஏதேதோ ஒலிகளை
இரசித்துத்  தலையசைத்தவாறு


மழையொடு நனைதல்
எல்லாவற்றையும் நனைத்துவிடும் தீரத்தோடு
வானிலிருந்து விடைகொண்டு
பூமிநோக்கி விரைகின்றன
மழைத்தாரைகள்

சிறுமி ஒருத்தி கைகளை உயர்த்தி
மழையின் குளிர்ச்சியை  உணர்ந்தவாறு
மழையோடு உரையாடுகிறாள்  
அவள் கால்கள்
மழைநீரில் கோலங்கள் வரைய
குதூகலத்தில் நிறைகிறாள்

மழைத்துளிகள் சொட்ட சொட்ட
இறுகியிருக்கும் சிலரின் மனத்தாழ்ப்பாள்
நெகிழ்கிறது                                                        

மழைச்சாரல் உடல் நனைத்து
இருமனங்களின் இடைவெளி குறைத்து
அன்புத்தூறலைத்  தொடக்கி வைக்கிறது  
        
மழையின் கோரத்தாண்டவம்
நினைவுப் பள்ளத்தில்
தீராத மோகத்தை நிரப்பியவாறு                      
அலைக்கழிக்கிறது              
                            

ஒரு மழைநாள்
நினைவூஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும்
இன்னொரு மறக்கவியலா  மழைநாளை
அழைத்து வருகிறது                                           

ஒவ்வொரு மழைத்துளியிலும்
கலந்து கரைகிறது
வெம்மையின் பெருமூச்சு                                  

ஒவ்வொரு மழைத்துளியிலும்
எப்படியோ கலந்து விடுகிறது
மண்ணின் மணம்
                                        
மழைக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது
உடலை மட்டுமின்றி
உயிரையும் நனைக்கும் மாயம்                                   

மழையில் நனைந்து மழையொடு
கலந்து கரையும் சிறுமி
தான் தாயான காலத்தில்
கவனமாயிருக்கிறாள்                                                     

சன்னலின் வழியே
மழைபார்த்து ரசிக்க
சிறுமியான தன் மகளை அனுமதிக்கிறாள்                     

                                               

நடந்து முடிந்த தேர்தலில்


நடந்து முடிந்த தேர்தலில்
யார் வெற்றியாளர் என அறிந்துகொள்ள
பரபரப்புக் காய்ச்சல் எல்லார் மனங்களிலும்
பரவியிருந்தது

பக்கம் பக்கமாக எழுதிய எழுத்துகள்
பலரின் மனத்தை வளைத்திருக்கலாம்
நம்பிக்கை விதைகள் இதய இடுக்களில்
தவறியாவது விழுந்திருக்கலாம்
விடியலின் கீற்றுகள் நுழைய
கதவுகள் திறக்கலாம்
பலரின் எண்ணங்களில்
எதிர்பார்ப்பு இழைகள்
பின்னத் தொடங்கின

பல்முனைத் தாக்குதல்களுக்கும்
மௌனமொழியால் உரக்கப் பேசி
நிராயுதபாணியாய்
மார்பு காட்டி நின்றவர்கள்                                        
நம்பிக்கைத் தோணியைப் பற்றியவாறு
ஆயுதங்களை நம்பாமல்
மனங்களோடு பேசிப்பேசி
வியூகங்களை வகுக்க
பலரின் எண்ணங்களில்
எட்டிப்பார்க்கவேயில்லை
புயல் பற்றிய கவலைகள்

தேர்தலின் முடிவு எந்நேரத்திலும்
வந்துவிடும் என அறிவிப்பு வந்தது

காத்திருந்த
அந்த நெருப்பு நிமிடங்களில்தான்
அதுவரை பெயரறிந்து முகமறியாதவர்களோடு
கைகுலுக்கிக் கொள்ள முடிந்தது

எழுதிக்குவித்த விரல்களைப் பற்றி
அவற்றின் ஸ்பரிசம் உணர்ந்து
பழைய படைப்புகளின் மீது
பயணிக்க முடிந்தது                               

முதுமையெனும் முரடனிடம்
வண்ணம் இழந்தாலும்
நம்பிக்கையிழக்காத உள்ளங்களோடு
உறவாட முடிந்தது.

எழுதியெழுதி ஓய்ந்து கிடந்தவர்கள்
எழுந்து வந்திருந்தார்கள்
நீங்களா அவர்?
எனப் புருவ விளிம்புகள்
ஆங்காங்கே உயர்ந்தன

எதிர்பார்த்த தருணம் வந்தது

பதிந்துகொண்டவர்களைவிட
பதிவான மொத்த வாக்குகளில்
ஒன்று கூடுதலாக கணக்கில் வந்ததால்

யாரும் வெற்றிபெறவில்லை என்று
அறிவித்தார்கள்


Wednesday, August 31, 2016

ஒரு பொய்யை மறைக்க
                               ஒரு பொய்யை மறைக்க
                               உண்மைபோல் ஆடை அணிந்த
இன்னும் கொஞ்சம் பொய்கள் தேவை

ஒரு பொய்யை  மறைக்க
பொய்யை உண்மைபோல்
அழுத்தமாய்ச் சொல்லும்
கற்பனைத் திறம் தேவை

ஒரு பொய்யை மறைக்க
முன்பே பொய் சொல்லிச் சமாளித்த
முன் அனுபவம் உதவும்

ஒரு பொய்யை மறைக்க
கேட்பவருக்குக் கொஞ்சம்
ஞாபக மறதி  இருத்தல் நலம்

ஒரு பொய்யை மறைக்க
அசாத்தியத் துணிவும்
பொய்யென்று தெரிய வந்தால்
மீண்டும் மறுத்துவிடும் தில்லும் வேண்டும்

ஒரு பொய்யை மறைக்க
சொல்லும் பொய்கள்
உண்மையைவிட  தத்ரூபமாய்
இருக்க வேண்டும்

ஒரு பொய்யை மறைக்க
மீண்டும் மீண்டும் அதே பொய்யைத்
திரும்பச் சொல்லும் முனைப்பு வேண்டும்

இவர் சொல்வது உண்மைதானா?
என்றறிய முகம் ஆராய்வார் முன்
எப்பொழுதும் முகமாற்றமின்றி
புன்னகையைச் சிந்தவேண்டும்

உண்மைக்கு எதுவும் தேவை இல்லை
பொய்க்குத்தான் ஆடையும்
அலங்காரமும் அணிமணியும் தேவை

ஒரு பொய்யை மறைக்க
முடிந்தால் எல்லார் வாய்க்கும்
பூட்டுப் போட்டுச் சமாளிக்கலாம்

ஒரு பொய்யை மறைக்க
பொய்யோடு இரண்டறக் கலந்து
கரைந்துபோக வேண்டும்

ஒரு பொய்யை மறைக்க
நம்மைச் சுற்றிலும்
நம் பொய்யைக் கொண்டாடும்
அபிமானிகளும் ஏமாளிகளும் வேண்டும்                         

Saturday, April 30, 2016

மனம் நிறைய பூக்கள் - 3                                                வட்டங்களில் நாங்கள்


ஒரு வட்டம் என்பது
எப்போதும் ஆகாது எங்களுக்கு

ஒன்றிலிருந்து இன்னொன்றாகப்
புதுப்புது வட்டங்களில் நுழைந்து
வாழ்ந்து பார்ப்பதே அலாதி இன்பம்

ஒவ்வொரு முறையும்
வட்டங்களில் ஓட்டைகள் உள்ளதாக
உணரத்தொடங்கியபோது

வேண்டிய ஒருவருக்குப் பரிவட்டம் கட்டி
சபையேற்ற
இடையூறுகள் முளைத்தபோது

வட்டத்துக்குள் விதியாகும்
சட்டங்களை மதியாமல்
எதிர்மாறாய்த் துருவங்கள்
தலைதூக்கியபோது

வட்டத்துக்குள்ளிருந்து சிலரை
வெளியே தள்ளிக்
கதவடைக்க முடியாதபோது

வட்டத்தின் அளவைச் சுருக்கிச் சுருக்கி
கழுத்தை நெரிக்கும் அளவுக்குக் குறுகியபோது

வட்டத்தின் எதிர்காலம் குறித்து
அவநம்பிக்கைகள் மனத்தை அரித்தபோது

வட்டத்திலிருந்து வெளியேறும்
அல்லது வெளியேற்றப்படுபவர்களுக்கு
ஆதரவுக் கரம் நீட்ட முனைந்தபோது

இதே வட்டத்திலிருந்தால்
இனி இலாபமேதும் காணவியலாது
என்றுணர்ந்தபோது

ஒன்றிலிருந்து ஒன்பதாக
பலப் பல வட்டங்களை உருவாக்கினோம்

எல்லா வட்டங்களிலும்
கண்ணுக்குத் தெரிகின்றன
அதிகார பீடங்களில்
வீற்றிருக்கும் தலைகளின் பின்னால்
ஒளிவட்டங்கள்

அந்த ஒளி வாங்கி
வாழ்வுக்குள் வினியோகிக்கும்
வழிதேடுவதிலேயே கழிகிறது காலம்

ஒவ்வொரு வட்டமும்
வெளிப்பார்வைக்கு
ஒரு சுழியமென்பது
வட்டத்துக்குள்ளே இருப்பவர்களுக்கு
ஒரு போதும் தெரிவதேயில்லை


நதி இணைப்பும் நாடுகள் இணைப்பும்கூட
சாத்தியமாகலாம்
வட்டங்கள் இணைப்புக்கு இங்கே
வாய்ப்பே இல்லை